சிவில் பிரஜைகளுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் தற்காலிகமாக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் இவ்வாறு துப்பாக்கிகள் மீள பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதிக்கு முன்னர் வெலிசரவில் உள்ள அரசாங்கத்தின் வணிக வெடிமருந்து களஞ்சியசாலையில் உரிய துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அனைத்து உரிமதாரர்களுக்கும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஏறக்குறைய 50 துப்பாக்கிகள் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு அமைச்சு பல்வேறு காரணங்களுக்காக சுமார் 1650 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களை வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், குறித்த திகதிக்கு முன்னர் அனைத்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் கையளிக்கப்பட வேண்டும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாறாக அத்துடன், குறிப்பிட்ட திகதிக்கு முன்னர் அனைத்து துப்பாக்கிகள் ஒப்படைக்க தவறும் பட்சத்தில், 1916ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க துப்பாக்கி கட்டளைச் சட்டத்தின்படி சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என சம்பந்தப்பட்ட உரிமதாரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகளை மீளாய்வு செய்ததன் பின்னர், அவற்றை மீண்டும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.