மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை பல புது முகங்கள் களமிறங்கி இருப்பதால் மிகவும் போட்டித் தன்மை காணப்படுகிறது. மக்கள் புதியவர்களை விரும்புவதால் இவர்களிற்கே வெற்றி வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது. அதேவேளை எமது கட்சி நாடளாவிய ரீதியில் நான்கு ஆசனங்களை கைப்பற்றும் என ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைமை வேட்பாளர் அஜ்மல் இஸ்பஹான் தெரிவித்தார்.
ஏறாவூரில் நேற்று புதன்கிழமை (23) இடம் பெற்ற வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கண் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எமது கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தும். ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் சேர்ந்தும் போட்டியிடுகின்றோம்.
பாராளுமன்றில் ஆட்சி அமைக்கும் அரசாங்கத்திற்கு எமது ஆதரவினை வழங்குவோம். இதன் மூலம் நாட்டு மக்களின் எதிகாலத்தினை செழிப்பாக்க நாம் உதவியாக இருப்போம். அதேவேளை மாவட்டத்தில் சுகாதாரம் ,கல்வி, போக்குவரத்து போன்றவற்றில் காணப்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வது எமது குறிக்கோளாகும்.
அதேவேளை ஏழை மக்களின் நலன்களில் கூடுதல் கவனம் செலுத்தி அவர்களிற்கு இருக்கும் குறைபாடுகளை இல்லாதொழிப்போம். ஊழல் அற்ற வெளிப்படை திறன் கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவோம் எனவே எங்களுக்கு இதற்கான பூரண ஆதரவினை மக்கள் எமது கட்சிக்கு வழங்குவார்கள் என நாம் திடமாக நம்புகின்றோன் என்றார்.