ஹொரணை – கும்புக பிரதேசத்தில் வயல்வெளியில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர் ஒருவருக்கு திடீரென கைகளில் காயம் ஏற்பட்டதையடுத்து மின்னல் தாக்கியதாக நினைத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருப்பது தெரியவந்துள்ளது.
வயல்வௌிக்கு அருகில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியின் காரணமாக குறித்த இளைஞனின் கையில் தோட்டா ஒன்று தாக்கியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஹொரணை – கும்புக பிரதேசத்தில் உள்ள வயல் ஒன்றில் தந்தையொருவர் நேற்றுமுன்தினம் (22) பிற்பகல் தனது இரண்டு மகன்களுடன் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது, திடீரென மகன் ஒருவரின் இடது கை மற்றும் வலது கையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வடிந்துள்ளது.
இதன்படி, சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், ஒன்றரை கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஹொரணை – கும்புக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு பயிற்சிப் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சியின் போது குறித்த இளைஞன் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியிருக்கலாம் என சந்தேகம் வௌியிட்டனர்.
சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் பண்டார தலைமையில் பண்டாரகம பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.