பெண்கள் சிறுவர்களுக்கு எதிராக அநீதிகளை நிறுத்த குரல்கொடுக்க பெண்களே எனக்கு வாக்களிக்கவும்–தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண்வேட்பாளரான வனிதா செல்லப்பெருமாள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மற்றும் மண் மாபியாக்களால் அழிக்கப்பட்டு வருகின்றது. அதேபோல பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான அநீதிகள் இடம்பெற்று வருகின்றது. எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் பெண்கள் சமத்துவம் பேணப்பட வேண்டும். இதற்கு குரல் கொடுக்க பெண்களாகிய நீங்கள் எங்கள் கட்சி திசைகாட்டிக்கும் எனது 8ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு தேசிய மக்கள் கட்சியின் பெண்வேட்பாளரான வனிதா செல்லப்பெருமாள் கேட்டுக் கொண்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (24) இடம்பெற்ற ஊடக மாநாட்டின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
”தேசிய மக்கள் சக்தி சார்பாக பெண்களுக்காக குரல் கொடுப்பதற்காக பெண் வேட்பாளராக களமிறங்கியுள்ளேன். கடந்த 15 வருடங்களுக்கு மேலாக அதிகளவான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 ஆயிரத்துக்கு மேற்பட்ட விதவை பெண்கள் இருக்கின்றனர். அதேபோல வறுமை கோட்டின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கின்றனர்.பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு இதுவரை சரியான வாழ்வாதாரம் செய்யப்படவில்லை எனவே அவர்களின் நிலையான நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்காக சுயதொழில் வாய்ப்புக்கள் மற்றும் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற பல திட்டங்களுடன் களமிறங்கியுள்ளேன்.
இந்த நாட்டில் பல இயற்கை வளங்களை பல அரசியல்வாதிகள் மண்மாபியாக்கள் மண்அகழ்வு மற்றும் காடழிப்பு போன்ற செயற்பாட்டினால் மாவட்டத்திலுள்ள பல ஏக்கர் கணக்கான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மீன்பிடி பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல பிரச்சனைகள் மாவட்டத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
அதேவேளை பல ஏக்கர் அரச காணிகள் பல அரசியல்வாதிகளால் சூறையாடப்பட்டுள்ளது. இவற்றை முற்றிலும் இல்லாதொழிக்க முடிந்த சட்டநடவடிக்கையினை எங்கள் ஆட்சியில் எடுப்போம் அதேபோன்று கல்வியில் இடம்பெற்றுள்ள மோசடிகளை சீர் செய்து சிறுவர்களுக்கான கல்வியை மேம்படுத்துவதற்கான பல திட்டங்கள் செயற்படுத்த உள்ளோம்.
எனவே இலங்கையில் 50 வீதமானோர் பெண் வாக்காளர்களாக இருக்கின்றனர். இருந்தபோதும் தேர்தல் களத்தில் அதிகமான பெண்கள் களமிறங்கியுள்ளனர். தேசிய மக்கள் சக்தி பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றது. சமத்துவம் பேணப்படவேண்டும். எனவே பெண்களாகிய நீங்கள் எங்கள் கட்சி திசைகாட்டிக்கும் பெண்ணாகிய எனது 8ம் இலக்கத்திற்கும் வாக்களிக்குமாறு அன்பாக கேட்டுக் கொள்கின்றேன்.