‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்து நடிகர் சசிகுமார், இயக்குநர் ரா.சரவணன், விநியோகஸ்தர் ‘டிரைடண்ட்’ ரவி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரா.சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் நடிப்பில் உருவான திரைப்படம் நந்தன். தாழ்த்தப்பட்ட மக்களின் வலியைப் பேசும் படமாக உருவான இதில் கவனம் ஈர்க்கும்படியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சசிகுமார்.
இத்திரைப்படத்தில், பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருந்தார். இப்படம் செப்.20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு ஓடிடியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
பட்டியலின மக்கள் ஊராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது என்னென்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இப்படம் பேசியுள்ளது. இப்படத்திற்கு பல தரப்பினரும், அரசியல் தலைவர்களும் வாழ்த்துகள் தெரிவித்திருந்தனர்.
அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தும் இந்த திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ஓடிடியில் ‘நந்தன்’ திரைப்படத்தை பார்த்து விட்டு, நடிகர் சசிகுமார், இயக்குநர் ரா.சரவணன், விநியோகஸ்தர் ‘டிரைடண்ட்’ ரவி ஆகியோரை தொலைபேசியில் அழைத்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
அவர்களிடம் பேசிய ரஜினிகாந்த் “நந்தன் மிகத் தரமான, தைரியமான திரைப்படம்” என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நடிகர் சசிக்குமார் சத்யசிவா இயக்கத்தில் ‘ஃபிரீடம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் எதிர்கொண்ட பிரச்னைகளைப் பேசும் படமாக இது உருவாகி வருவதாக கூறப்படுகிறது.