வாகனங்கள் படிப்படியாக இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும். மோட்டார் சைக்கிள்கள் இறக்குமதிக்கு சரியான முடிவில்லை. வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதற்கான நடவடிக்கையானது, இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இறக்குமதி கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு (IMF) இலங்கை வழங்கிய உறுதிமொழிகளுக்கு இணங்க, அனுமதிக்கப்படும் என திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் சுற்றுலா மற்றும் பிற பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பிறகு, கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்படும்.
நவம்பரில், மீண்டும் மத்திய வங்கியின் ஒப்புதலுடன், லொறிகள், டிப்பர் மற்றும் பெக்ஹோ போன்ற தொழில்துறை வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்க மற்றொரு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும், என்றார்.
பெப்ரவரி தொடங்கும் போது கார்கள், வான்கள் மற்றும் ஜீப்கள் போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு வாகனங்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.
இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து வாகனங்களும் 90 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும், மேலும் ‘ திருத்துமிட இலக்க தகடுகளுடன் (garage number plates) வாகனங்களை விற்க அரசாங்கம் அனுமதிக்காது என்று அந்த அதிகாரி வலியுறுத்தினார். அதன்படி, வாகனத்தை இறக்குமதி செய்த 90 நாட்களுக்குள் டீலர் பதிவு செய்யத் தவறினால் செலவு, காப்புறுதி,சரக்கு (CIF) மதிப்புக்கு இணையான 3 சதவீத வரி விதிக்கப்படும்.
மோட்டார் சைக்கிள்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு திறைசேரி பரிந்துரைத்துள்ளதெனினும் இந்த கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்பது குறித்து இன்னும் சரியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
முச்சக்கர வண்டிகள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு மின்சார முச்சக்கர வண்டிகளை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே அரசாங்கம் அனுமதிக்கும் என்றார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து முடிவெடுக்கும் போது நாட்டின் அந்நிய செலாவணி நிலைமை அரசாங்கத்தின் முதன்மையானது, வாகனங்களை இறக்குமதி செய்யும் போது சுமார் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டை விட்டு வெளியேறும் என்று அதிகாரி குறிப்பிட்டார். இந்த வாகனங்களுக்கான வரிகள் மூலம் அதே தொகையை திரும்பப் பெற நாங்கள் உத்தேசித்துள்ளோம், என்று அவர் மேலும் கூறினார்.