சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட ம.பரமேஸ்வரன் (ஈசன்) என்பவர் கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டமை மற்றும் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமை ஆகிய காரணங்களுக்காக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்தார்.
கீதநாத் காசிலிங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், குறித்த நபர் மீதான முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அந்நபரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்தியகுழு பரிசீலித்து அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.
இத்தீர்மானம் சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த நபரால் இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட மற்றும் இனிமேல் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பொறுப்பேற்காது.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும், கட்சி நலன் மற்றும் மக்கள் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை சட்ட விரோத, ஊழல் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு எதிராக பாரபட்சம் பாராமல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவிக்கின்றேன் – என்றுள்ளது.