அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கையை அடுத்து இஸ்ரேலியர்கள் உட்பட பெருமளவான சுற்றுலா பயணிகள் நாட்டை விட்டு வெளியேற ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே அறுகம்குடா பிரதேசத்தில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக காவல்துறை தலைமையக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்தேக நபர்கள் பயங்கரவாத புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர்களிடமிருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
சந்தேகநபர்கள் மூவரும் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் மாவனல்லை பிரதேசங்களில் பதுங்கியிருந்த போதே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவர் ஈரானில் இருந்து இந்த நாட்டுக்கு வந்தவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
முஸ்லிம் நாடுகளை இலக்கு வைத்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களுக்கு மேலதிகமாக இலங்கை வந்துள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை முதலில் இந்திய புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்திய பின்னர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அதன்படி, அறுகம்பேகுடா பிரதேசத்திற்கு பலத்த பாதுகாப்பை வழங்குவதற்கு காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், ஆயுதப்படைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு தற்போது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அறுகம் குடா உள்ளிட்ட பல பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் விசாரணை நடந்து வருவதால், புலனாய்வுத் துறை அதிகாரிகள் பலரை அந்தப் பகுதிகளுக்கு அனுப்பி, புலனாய்வுத் தகவல்களைப் பெற, காவல்துறை தலைமையகம் ஏற்பாடு செய்துள்ளது.