தமிழா உனக்கென்ன பிரச்சினை ????
ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளவேண்டும் என்பதுதானே உன் பிரச்சினை. அந்த ஆண்ட பரம்பரை என யாரைக் குறிப்பிடுகிறாய்? இலங்கையில் ஆண்ட பரம்பரை என யாருமே இல்லை. மன்னர்கள் அதிகாரம் ஒழித்து மக்களாட்சி உலகம் முழுவதும் தொடரும்போது நீ மட்டும் ஆண்ட பரம்பரை மீண்டும் ஆளவேண்டும் என்கிறாய்? இது எந்த வகையில் நியாயம்?
நாடு வேண்டும் என ஆயுதம் ஏந்தினாய்? நாலாக எட்டாக முப்பத்திரண்டு இயக்கங்கள் ஆயுதம் ஏந்தின. கடைசியில் என்னாச்சு. ஒன்றுக்கொன்று அடிபட்டு உங்களை நீங்களே கொலை செய்தீர்கள். எதிரிக்கு வேலையில்லாமல் நீங்களே சொந்த இனத்தைக் கொன்று குவித்தீர்கள்.
ஆண்ட பரம்பரை என வந்து அந்தப் பரம்பரைக்கே மரணக் குழி வெட்டினீர்கள். கடைசியில் எல்லோருமே மாண்டதுதான் மிச்சம்.!!
அதிகாரம் வேண்டுமென கேட்டபோது மாகாண சபை கிடைத்தது. வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாண சபை கிடைத்தது. அதையும் இயங்கவிடாமல் பணி புரிந்தவர்களை கொலை செய்தீர்கள். இயக்கியவர்களை அரசோடும் படைகளோடும் இணைந்து நாட்டை விட்டே விரட்டினீர்கள். வடகிழக்கு மாகாண சபையைக் கெடுத்தது யார்??
வட கிழக்கு மாகாண சபையை ஜேவிபி எதிர்த்தது. வழக்குப் போட்டது. வென்றது. ஆனால் யாராவது எதிர்த்து நின்றீர்களா? வழக்குப் போட்டீர்களா? இல்லையே.
மாகாண சபை இயங்கவிடாமல் குழப்பி அடித்த புலிகளை விமர்ச்சிக்கத் தைரியம் இல்லை. ஜேவிபி மேலே பழிபோட்டு சொந்த தவறுகளை மறைப்பது எந்த வகையில் நியாயம்?
தீர்வுகளை நீங்களே வேண்டாம் என்றுவிட்டு, இன்று தீர்வு என்றால் என்ன செய்யமுடியும்? வடக்கு மாகாண சபையை நடாத்த ஆளின்றி முகவரியற்ற விக்கினேஸ்வரனை கொண்டுவந்தீர்கள்.பாராளுமன்றத்தில் பேசும் திறனில்லாத காரணத்தால் கொழும்பில் இருந்து சுமந்திரனை கொண்டு வந்தீர்கள். உங்களுக்கே உங்களை நிர்வகிக்க திறமையில்லை. ஆனால் உங்களுக்கு அதிகாரம் வேண்டும் என்கிறீர்கள்.
வடக்கே நிர்வாகம் முழுவதும் தமிழர்களால் நடாத்தப்படுகிறது. மாகாண சபைகூட தமிழ் அதிகாரிகளால் நடாத்தப்படுகிறது. அவை நேர்மையாக நடாத்தப்படுகிறதா? ஊழல் இன்றி நடக்கிறதா? மனிதர்கள் எல்லோரும் சமனாக நடாத்தப்படுகிறார்களா? பல்கலைக்கழகம் முதல் பாடசாலைகள்வரை நேர்மையாக நடாத்துகிறார்களா?வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் ஒழுங்காக சேவை புரிகிறார்களா?
மருந்துவ தாதிகள் நாகரீகமாக / மரியாதையாக கதைக்கிறார்களா? இதற்கு எவரிடமாவது பதில் இருக்கிறதா? இங்கே அரசாங்கமோ, சிங்கள இனவாதிகளோ,மூக்கை நுழைக்கவில்லை.எல்லாமே தமிழ் பேசுகிறவர்களின் அதிகாரம். ஆனால் மக்களை மக்களாக நடாத்துகிறார்களா??அவர்களுக்கான நியாயத்தைப் பெற முடியுமா?
நீதிக்காக வழக்காடிய சட்டத்தரணிகள் உண்டா? நேர்மையாக நீதி வழங்கிய நீதிபதிகள் உண்டா? கூலிக்கு மாரடிக்கும் சட்டத்தரணிகள்,மக்களுக்காக வாதாடியது உண்டா? ஆயிரம் சமூகப் பிரச்சினைகள்,
பல நூறு சாதிப் பிரச்சினைகள். இதற்கு உன்னிடம் என்ன தீர்வு இருக்கிறது.
வெளியேற்ற பட்ட இஸ்லாமியர்களின் சொத்தை அபகரித்தது இனவாதிகளா? அவர்களை வெளியேற்றியது இராணுவமா? இலங்கை அரசா? தமிழா முதலில் உன்னைத் திருத்து.உன் சமூகத்தை ஓன்றாக்கு.அவர்களுக்கு உரிய நியாயத்தை வழங்கு.!
வடக்கே இருக்கும் சாதி சமூகப் பிரச்சினைகளை உன்னால் தீர்க்க முடியாதபோது, உன்னால் தீர்க்க விரும்பாதபோது. இனப் பிரச்சினைக்கு தீர்வு தா என கேட்க, உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.
நீ சாதி மத பிரதேச பிரச்சினைகளை மூடி மறைக்கிறாய். அவர்கள் இனப் பிரச்சினையே இல்லை என்கிறார்கள். உனக்கு மட்டும்தான் பொய் பேச வருமா?
அனுரவிடம் இனப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்கிறாய். ஆனால் இது ரணிலோ, சஜித் அல்லது நாமல் தந்துவிடுவார்களா?என்ன பதில் சொல்லு.?
தமிழா நீ மட்டும் உன் வளங்களை பங்கிட்டு, சகலருக்கும் கொடுத்தாலே தமிழர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். நகரத்துப் பள்ளிகளுக்கும், யாழ்ப்பாண கோவில்களுக்கும் நீ செலவழிக்கும் பணம்
பல ஆயிரக் கணக்கான தமிழர்களை வாழவைக்க போதுமானது.
கருங்கற்களால் கோவில் கட்டுவதும், பளிங்குக் கற்களால் பாடசாலைகளை அழகுபடுத்தும், பணத்தை ஏழைகளுக்கு நீ செலவழிக்க தயாரா? சித்திர தேர்களும் சிற்பம் நிறைந்த கோவில்களையும் எழுப்பும் உனக்கு, சமூகத்தை ஏன் கட்டி எழுப்ப முடியாது!
கோவில்களும், கோபுரங்களும் கட்டி கும்பாபிசேகம் நடத்துவதால் உன் பிரச்சினைகள் தீர்ந்ததா? கோவிலைக் கட்டி சாதியை வளர்க்க நினைக்கும் உனக்கு எதற்கு அதிகாரம் ஆட்சி?
எதற்கெடுத்தாலும் அரசை, அடுத்த இனத்தைப் பழிபோடுவது என்ன நியாயம்? முதலில் நீ நேர்மையாக வாழப் பார். இலங்கையனாக வேண்டாம் மனிதனை மனிதனாக மதிக்கப் பழகு.
தமிழா உனக்கு என்ன பிரச்சினை? அதற்கு உன்னால் தீர்வு காண முடியாதா?