இரத்தினபுரி மாவட்டத்தில் இன்று (03) மதியம் மீண்டும் பலத்த மழை பெய்துள்ள நிலையில், இரத்தினபுரி பிரதேச செயலகத்தின் 14 பகுதிகளுக்கு முதல் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மலைச்சரிவுகளை அண்மித்த மக்கள் மற்றும் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயம் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இரத்தினபுரி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் மாவட்ட பொறியியலாளர் அபிதா வனசுந்தர மக்களுக்கு தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி, எஹலியகொட, அலபத, குருவிட்ட, கஹவத்த, கொடகவெல, பெல்மடுல்ல ஆகிய இடங்களுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்பும், நிவித்திகல, அயகம, பலாங்கொடை, இம்புல்பே, ஓபநாயக்க, கிரியெல்ல மற்றும் கலவான ஆகிய இடங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய அறிவிப்பும் விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பெய்த கனமழையுடன் பல மண்சரிவுகள் ஏற்பட்டதாகவும், தற்போதைய மழையுடன் அந்த பகுதிகளில் மீண்டும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுதல், கிளைகள் சரிந்து விழுதல், நீர் ஊற்றுகள், பாறைகள் விழுதல், வீடுகளில் விரிசல் ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவதானமாக இருக்க வேண்டுமென்றும் பிரதேச செயலகங்களின் அனர்த்த பிரிவுகளுக்கு அறிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர்.