ஜப்பானில் சைக்கிள் ஓட்டும் போது கையடக்க தொலைபேசி பயன்படுத்தினால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கடந்த சில தினங்களாக சைக்கிள் ஓட்டும்போது கவனக்குறைவால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரித்தது. கடந்த ஆண்டு மட்டும் 72 ஆயிரம் சைக்கிள் விபத்துக்கள் நடந்துள்ளன. இது நாடு முழுவதும் ஏற்படும் மற்ற வாகன விபத்துகளில் 20 சதவீதம் ஆகும். சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அரசு ஆலோசனை நடத்தியது.
சைக்கிள் ஓட்டும் போது பெரும்பான்மையினர் கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதே விபத்துக்கு முக்கியமான காரணம் என தெரிய வந்துள்ளது. இதனால், போக்குவரத்து விதிகளில் புதிய திருத்தங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி சைக்கிள் ஓட்டும்போது கையடக்க தொலைபேசி பேசவோ, இணையத்தை பயன்படுத்தவோ கூடாது. இதனை மீறுபவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது சுமார் 50 ஆயிரம் ரூபா வரை அபராதம் விதிக்கப்படும்.
மது போதையில் சைக்கிள் ஓட்டினாலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சுமார் 2 இலட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்படுமென்று போக்குவரத்து விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது.