பாஜகவிற்கு எதிராக பெங்களூருவில் எதிர்கட்சியினர் நடத்தும் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதைக்கண்டு பாஜக எரிச்சல் அடைந்திருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு பின்புறத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனி வீடு, எழும்பூர், பெசன்ட் நகர் மற்றும் விழுப்புரம் சண்முகபுரத்தில் உள்ள வீடு மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, அலுவகங்கள் என 9 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன. அமைச்சர் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியின் உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
அமலாக்கத்துறையினர் நடத்தும் சோதனைக்கு திமுகவினரும், கூட்டணி கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் இன்று எதிர்கட்சியினர் கூட்டத்தில் பங்கேற்க பெங்களூரு புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், அமலாக்கத்துறையானது பாஜகவின் ஏவல்துறையாக மாறிவிட்டதாக முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். கடந்த 13ஆண்டுகளுக்கு முன்பாக ஜெயலலிதா ஆட்சி காலத்தில் போடப்பட்ட வழக்கில் இப்போது சோதனையும் விசாரணையும் நடைபெறுகிறது.
இந்திய அளவில் மிகப்பெரிய ஆபத்தாக பாஜக உருவெடுத்துள்ளது. பாஜக ஆட்சியை அகற்ற எதிர்கட்சியினர் ஓரணியில் திரண்டுள்ளனர். எதிர்கட்சியினரின் கூட்டத்தை முடக்கவே அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ளது பாஜக, பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சியினர் கூட்டத்தை திசை திருப்ப பாஜக முயற்சி செய்து வருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.