வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை ஈரான் மறுக்கும் நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தி ட்ரம்ப் கடிதம் எழுதியிருந்தார்.
அதில் ஈரான் நேரடி ஒப்பந்தத்திற்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். ஒப்பந்தத்திற்கு முன்வராவிட்டால் குண்டுவீச்சு உறுதி என்றே ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார்.

இந்த நிலையில், டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தரப்பில் அறிக்கை வெளியாகியுள்ளது.
ட்ரம்ப் இவ்வாறு கூறிய சில மணி நேரங்களில் ஈரான் தனது செயல்பாடுகள் மூலம் பதில் அளித்துள்ளது. அதாவது ஏவுகணைகளை தயார்நிலையில் வைக்கத் தொடங்கியிருக்கிறது.
உலகெங்கிலும் அமெரிக்காவுடன் தொடர்புடைய நிலைகளை குறிவைத்து தாக்கும் திறனைக் கொண்ட ஏவுகணைகளை ஈரான் இராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளதாக அரசு ஊடகமாக தெஹ்ரான் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
ஏவுதலுக்கு தயார்நிலையில் உள்ள ஏவுகணைகளில் பெரும்பாலான ஏவுகணைகள், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் உள்ள நிலத்தடி வசதிகளில் அமைந்துள்ளன என்றும், அவை வான்வழித் தாக்குதல்களை தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்காவும் ஈரானும் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.