மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வாழைச்சேனை புதுக்குடியிருப்பு அருள் மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள்; ஆலயத்தின் ஆடிப்பூர பிரம்மோற்சவப் பெருவிழா கடந்த (13) கொடியேற்றதுடன் பக்தர்களின் ஆரோகர கோஷத்துடன் ஆரம்பமாகியது.
தட்சிண கைலாயம் என போற்றப்படும் கிழக்கிலங்கை கீழ் கரையில் வாழைச்சேனை நகரிலே சைவமும் தமிழும் தலைத்தோங்கி செழித்திருக்கும் புதுக்குடியிருப்பு பதியிலே எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளுக்கு நிகழும் மங்கள கரமான சோபகிருது வருடம் ஆனி மாதம் 28 ஆம் நாள் 13.7.2023 வியாழக் கிழமை கார்த்திகை நட்சத்திரமும் சித்த யோகமும் ஏகாதசி திரியும் கூடிய சுப வேளையில் இன்று காலை கொடியேற்றதுடன் பிரமோற்சவ பெரு விழா ஆரம்பமாகியது.தொடர்ந்து 10 தினங்களும் கிரியை நிகழ்வுகளும் உற்சவ நிகழ்வுகளும் நடைபெறும்.21.7.2023 அன்று வெள்ளிக் கிழமை சப்பறத் திருவிழாவும் 22.7.2023 அன்று சனிக்கிழமை ஆடிப்பூர தினத்தில் அன்னைக்கு தீர்தோற்சவத்துடன் விழா இனிது நிறைவு பெறும்.
இன்று காலை வாழைச்சேனை கைலாயப் பிள்ளையார் ஆலயத்தில் இருந்து வழமை போன்று மரபு ரீதியாக ஆலயத்தில் விசேட பூசைகள் நடைபெற்று விநாயகப் பெருமானின் அருளாசியுடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க அம்பாளுக்கான கொடி ஆலயத் தலைவர் ஆத்மீகத் தென்றல் வை பரராஜசேகரம் மற்றும் ஆலய நிர்வாகத்தினரால் ஊர்வலமாக ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.பின்னர் மஹோற்சவ பிரதம குரு ஆலய நிர்வாகத்தினரால் வரவேற்கப்பட்டு அவருக்கான பாத பூஜை இடம்பெற்றது.தொடர்ந்து அம்பாளின் ஆலயத்தில் விசேட கிரியை நிகழ்வுகள் நடைபெற்று கொடியேற்றம் இடம்பெற்றது. திருவிழாக்கள் யாவும் ஆலய பிரதம குரு கணபதி பூஜா துரந்தரர் சிவஸ்ரீ மு.சண்முகக் குருக்களுடன் ; மஹோற்சவ பிரதம குரு சிவாகமரத்தினம் சிவஸ்ரீ ஆறுமுகரமேஸ்வர குருக்கள் ஆகியோர்களின் ஆசியுடன் நடாத்தப்படும்.