மட்டக்களப்பில் புதிதாக திறக்கப்பட உள்ள 10 மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று திரண்ட மக்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் அங்கத்தவர்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கிழக்கை அபிவிருத்தி செய்வதாகக் கூறியும் கிழக்கை மீட்கப் போவதாகக் கூறியும் அரசியல் நடத்தும் அரசியல்வாதிகள் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை சிறிலங்காவின் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்குடன் குறித்த மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பல வேலைத்திட்டங்கள் இருக்கின்ற போதிலும், மேலும் மேலும் அப்பாவி மக்களது வாழ்வாதாரத்தைச் சுரண்டும் ஒரு நிகழ்ச்சி நிரலின் கீழ் குறித்த அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் மக்களுக்கு நலன் தருகின்ற அபிவிருத்திகளை மேற்கொள்வதை விடுத்து மக்களின் பணத்தைச் சுரண்டுவதிலும் மக்களை மென்மேலும் துன்பத்தில் தள்ளுவதுமான செயற்பாடு கிழக்கில் தற்போது அரங்கேறி வருகின்றது.