கிராமப்புறங்களிலுள்ள முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரை நடவடிக்கையில் பங்குபற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும் இது தொடர்பாக அரசாங்கத்தினால் கவனம் செலுத்தப்படுமெனவும், புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நேற்று அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஹஜ் யாத்திரை ஏற்பாட்டு முகவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பில் மேலும் தெரிவித்த அவர், ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்காலத்தில் ஹஜ் தொடர்பான நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டார். தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரப்பப்படும் அவதூறுகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் அனைத்து மத நம்பிக்கைகளும் அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.