வைத்தியர் ஷியாப்தீன் மொஹமட் ஷாபிக்கு எதிராக குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு நீதவான் இன்று (06) உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான வழக்கு இன்று குருநாகல் பிரதான நீதவான் பந்துல குணரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வைத்தியர் ஷாபிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வாதிகள் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் அவர் விடுவிக்கப்படுவார் எனவும், வழக்கை தொடர்வதற்கான காரணங்கள் எதுவும் இல்லை எனவும் பிரதம நீதவான் தெரிவித்துள்ளார்.
வைத்தியர் ஷாபிக்கு எதிராக விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையையும் நீதவான் நீக்கியுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
வைத்தியர் ஷாபி தற்போது குருநாகல் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றி வருகின்றார் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
மே 24, 2019 அன்று, குருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணரான மொஹமட் ஷாபி, சுமார் 4,000 தாய்மார்களுக்கு மலட்டு அறுவை சிகிச்சை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.