பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கின்றபோது எங்களது அரசியல் உரிமை, ஒரு இலங்கைக்குள்ளே அரசியல் தீர்வு என்கின்ற விடயம், ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களுக்கான பொறுப்புக் கூறல் மற்றும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெறக்கூடிய வாய்ப்புள்ளதாக இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைமை வேட்பாளர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
வாகரை புதூர் பிரதேசத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாகரை கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பரப்புரை கூட்டத்தின்போது அங்கு வருகை தந்த மக்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்ற கட்சி இலங்கை தமிழ் அரசு கட்சியாகும். ஊழற்றதும்,களவு மற்றும் கட்சி தாவுதல் அற்றதுமான அவர்கள் கூறும் தகுதிகள் உள்ள கட்சி எமது தமிழ் அரசு கட்சியாகும். நாங்கள் கொலை செய்தவர்கள்,கொள்ளையடித்தவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கவில்லை.கப்பம் வாங்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் எமது கட்சி நியமனம் வழங்கவில்லை.எனவே இம்முறை எமது மக்கள் வடக்கு கிழக்கிலே அதிகளவு வாக்களிக்கக் கூடிய சந்தர்ப்பம் உள்ளது.
வடக்கு கிழக்கிலே அதிகளவு வாக்கினைப் போட்டால் அதிகளவு ஆசனம் கிடைக்கப்பெறும்.அதிகளவு ஆசனம் கிடைக்கப் பெறும் பட்சத்தில் ஜனாதிபதி சார்ந்த கட்சிக்கு 105 அல்லது 108 ஆசனங்கள் கிடைக்கப் பெறும் போது பாராளுமன்றத்திற்கு அதிகளவு ஆசனங்கள் தேவைப்படும் நிலை ஏற்படும்.இதன்போது அவர் எங்களது உதவியை தேடி வரக் கூடிய வாய்ப்பு வரலாம். எங்களது உதவியை தேடி வரும்போது அவருக்கு உதவி வழங்குவதா,இல்லையா,என்பது பற்றி பிறகு பார்ப்போம்’
எங்களது மக்கள் அதிகளவு வாக்கு போட்டால் மாத்திரமே இந்த நாட்டிலே நாம் பேரம் பேசும் சக்தியாக இருக்கலாம்.பேரம் பேசும் சக்தியாக நாங்கள் இருக்கின்றபோது எங்களது அரசியல் உரிமை,ஒரு இலங்கைக்குள்ளே அரசியல் தீர்வு என்கின்ற விடயம்,ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களுக்கான பொறுப்புக் கூறல் வேண்டும்.ஆயிரக் கணக்கான மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டும்.
அதற்கான விசாரணை நடக்க வேண்டும். நில ஆக்கிரமிப்பு விடயங்கள் நிறுத்தப்பட வேண்டும். வன இலாகா திணைக்களம்,கரையோரத்திணைக்களம், மகாவலி அதிகார சபை மற்றும் தொல் பொருள் திணைக்களத்தின் தலையீடு போன்றவை எமது மக்களுடைய காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுதல் நிறுத்தப்படல் வேண்டும். என்கின்ற பல்வேறுபட்ட விடங்களை பேசி தீர்க்கமுடியும் என்றார்.
ஆனால் வடக்கு கிழக்கிலே விசேட அபிவிருத்தி நிதியங்களை உருவாக்கி எமது மக்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். தென்னிலங்கை அரசாங்கம் போடுகின்ற பிச்சையைக் கொண்டு எமது மக்களின் அபிவிருத்தியை மேற்கொள்ள முடியாது. வடக்கு கிழக்குக்கென்று விசேட நிதியம் ஏற்படுத்தப்பட்டால் மாத்திரமே எமது மக்களுடைய பிரச்சினைகளை தீர்க்கமுடியும்.
இந்த விடயங்களை மேற்கொள்ள வேண்டும் என்றால் வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.வாகரை பிரதேசத்தினை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்ப வேண்டும்.இந்த பிரதேச மக்களுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும். அந்தப் பொறுப்பை நீங்கள் எங்களுக்கு முழுமையாக தர வேண்டும்.வாகரை பிரதேசத்தை காப்பற்ற வேண்டும் என்றால் தமிழ் அரசு கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.அதற்காக வாகரையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று பொய் கூறவில்லை.வாகரை மண்ணை விற்று வாங்கிய சாராயம்தான் தேர்தல் காலங்களில் வரும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.