மகளிர் கிரிக்கட்டில் இணைய துஷ்பிரயோகத்தைத் தடுக்க புதிய AI என்ற செயற்கை நுண்ணறிவு பொறிமுறையை அறிமுகப்படுத்தும் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் நடவடிக்கையை இந்திய அணியின் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் வரவேற்றுள்ளார்.
முன்னதாக, ஐக்கிய அரபு இராச்சியத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற 20க்கு20 உலகக் கிண்ணத்தின் போது, சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் இதனை வெற்றிகரமாக சோதனை செய்திருந்தது.
இதன்போது, கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு கருத்துகள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்பது தெரியவந்தது.
குறித்த தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவிடம் தோற்றது. அதன் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான நியூசிலாந்தின் வெற்றி காரணமாக போட்டியில் இருந்து வெளியேறியது.
இதனையடுத்து, ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியின் வீராங்கனைகள், சமூக ஊடக தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகினர்.
இந்தநிலையில் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் புதிய முயற்சியை, பெண்கள் பிக் பாஸ் லீக்கில் தற்போது பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக விளையாடி வரும் ஜெமிமா வரவேற்றுள்ளார்.
மகளிரை பாதுகாக்கவும், விளையாட்டைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும் சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் முயற்சி உதவும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.