தமிழ் வாக்காளர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கு முன்னுரிமை அளித்துத் தமது விருப்பு வாக்குகளை வழங்க வேண்டும் என்பது இனவாதம் அல்ல எனத் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (10) கொழும்பு கொச்சிக்கடை ஜம்பட்டா வீதியில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
அது இன பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் இன உரிமை ஆகும்.
உண்மையில், நடைமுறையில் உள்ள தேர்தல் முறையின் விருப்பு வாக்கு என்ற முறைமை அதைத்தான் வலியுறுத்துகிறது.
அதிலும் மிகக் குறிப்பாகத் தமிழர்கள் சிறுபான்மையாக வாழும் கொழும்பு, கேகாலை, இரத்தினபுரி, கம்பஹா, பதுளை கண்டி, ஆகிய மாவட்டங்களில் தமிழ் வாக்காளர்கள் தமது விருப்பு வாக்குகளைத் தமிழ் வேட்பாளர்களுக்கு மாத்திரம் வழங்குவது அத்தியாவசியமாகும்.
இதுவே, எமது பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள உள்ள ஒரே வழி.
இதைத்தான் விகிதாசார தேர்தல் முறையும் வலியுறுத்துகிறது.