நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார பணிகள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இது குறித்து விளக்கமளித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தேர்தலுக்கான பிரசாரப்பணிகள் அனைத்தும் திங்கட்கிழமை (இன்று) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றன. ஊடகங்கள் வாயிலாக கட்டணம் செலுத்தப்பட்டட விளம்பரங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றது. அதன் பிறகு தேர்தல் தினம் வரை மௌன காலமாகும்.
மேலும், தேர்தல் பிரசாரத்துக்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகங்களை அகற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோன்று வேட்பாளர்களின் இல்லங்களில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும். இல்லையேல் தேர்தல் சட்டத்துக்கு அமைய அவை அனைத்தும் அகற்றுவதற்கான நடவடிக்கைககள் எடுக்கப்படும்.
வாக்காளர்கள் தமது வாக்கைப் பயன்படுத்துவதற்காக உரிய வகையில் விடுமுறையைப் பெற்றுக்கொடுக்குமாறு அரச மற்றும் தனியார் துறையினரிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.
தேர்தலை நியாயமாகவும் சுமுகமாகவும் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. ஆகையால் அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.