கல்வி பொதுதாராதர உயர்தர பாடத்திட்டம் நிறைவு பெறாத காரணத்தால் உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மாணவர்களின் வலியுறுத்தலுக்கு மதிப்பளித்து உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு அரசாங்கம் பிற்போட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள சர்வஜன சக்தி கட்சியின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை ( 11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்கள் விடுதலை முன்னணியினர் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முதலாவது தாய் நாடு, இரண்டாவது கல்வி என்ற கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்பட்டார்கள்.
ஜே.வி.பியின் வலியுறுத்தலினால் நானும் அவர்களின் அரசியல் செயற்பாடுகளில் பகுதியளவில் இணைந்துக் கொண்டேன்.இருப்பினும் கல்வி நடவடிக்கைகளில் விசேட அவதானம் செலுத்தி தேர்ச்சிப் பெற்றேன்.
கொவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார தாக்கம் ஆகிய காரணிகளால் பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு தேசிய பரீட்சைகளை நடத்தும் காலம் பிற்போனது.
ஆசிரியர்களின் தொழிற்சங்க போராட்டங்களினால் பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் தாமதம் நிலவியது.
கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசெம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
உயர்தர பரீட்சை பாடத்திட்டம் நிறைவு செய்யாத காரணத்தால் உயர்தர பரீட்சையை பிற்போடுமாறு மாணவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் பரீட்சையாக உயர்தர பரீட்சை கருதப்படுகிறது. ஆகவே மாணவர்களின் நியாயமான கோரிக்கையை கருத்திற் கொண்டு உயர்தர பரீட்சையை ஒருமாத காலத்துக்கு அரசாங்கம் பிற்போட வேண்டும் என்றார்.