ஒரு இனமாக தமிழர்களுக்கான சமத்துவத்திற்கான உரிமைகளை, ‘இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு’ என்ற மனநிலையுடைய ஆட்சியாளர்களும், அவ் ஆட்சியாளர்களுக்கும், அவர்கள் உருவாக்குகின்ற கட்டமைப்புகளும் காலங்காலமாக மறுத்து வருகின்றன.
அதற்கு 1980 காலப்பகுதியிலிருந்து மக்கள் விடுதலை முன்னணி ஆற்றிய பங்கு அளப்பரியது. தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பிலான முன்னெடுப்புகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே அவற்றை நிறுத்துவதற்கு தொடர்ச்சியாக உழைத்தவர்கள் மக்கள் விடுதலை முன்னணியினர்.
தமிழர்களுக்கான உரிமைகளை மறுப்பதற்கு பிரதான சிங்கள தேசியக் கட்சிகள் மக்கள் விடுதலை முன்னணியினரைப் பயன்படுத்தி வந்தனர் என்பது தேசிய அரசியலை அவதானிக்கின்ற அனைவருக்கும் தெரிந்த விடயம்.
இருப்பினும், மக்கள் விடுதலை முன்னணியினரின் வன்முறையும், இரத்தக்கறையும் படிந்த வரலாறு அவர்களைத் தேர்தல் அரசியலில் தொடர்ச்சியாக பின்னடைவினை சந்திக்க வைத்தது. அதற்காக ஏற்படுத்திக்கொண்ட ஏற்பாடு தான் தேசிய மக்கள் சக்தி என்ற வேடம். சந்தைப்படுத்தலில் மிகவும் அடிப்படையான, ஆனால் வினைத்திறன் மிக்க உத்தி. அதனையே மக்கள் விடுதலை முன்னணியும் மேற்கொண்டது.
தேசிய மக்கள் சக்தி என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினரின் பங்காளிகள் யார் என ஆராய்ந்தால் இது தெளிவாகப் புலப்படும். இவர்களில் தேசிய பிக்குகள் முன்னணி முக்கியமானது. இவர்கள் P-TOMS (Post-Tsunami Management Structure) இற்கு எதிரான தேசிய மாநாட்டினை மட்டுமன்றி 2004 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது இடைக்கால தன்னாட்சி ஆணையத்திற்கு எதிராக பேரணி ஒன்றினையும் நடத்தியது.
இத்தகையவர்களுடன் கூட்டணி வைத்துள்ள தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக தமிழ் மக்கள் குரல்கொடுப்பதனைப் பார்க்கின்ற போது சுதந்திரம் வேண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிர்த்தியாகம் செய்தும் ஒரு இனமாக நாம் தோற்றுவிட்டோம் என்றே எண்ணத்தோன்றுகிறது.
- மக்கள் விடுதலை முன்னணி
- 71 சகோதரத்துவ ஒன்றியம்
- புதிய தலைமுறை
- புதிய சிறகுகள்
- அக்கரையில் நாம்
- மக்கள் முன்னோடி கலைஞர்கள்
- மக்கள் நற்பணிக்கான அரச ஊழியர்கள்
- ஜனோதானய
- தேசிய பிக்குகள் முன்னணி
- தேசிய புத்திஜீவிகள் அமைப்பு
- தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம்
- வியர்வைத் துளிகள் கூட்டமைவு
- இலங்கை கமியூனிஸ்ட் கட்சி (மாற்று அணி)
- சமூக நீதிக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்
- சமூக நீதிக்கான மருத்துவர்கள்
- முற்போக்கான பெண்கள் கூட்டமைவு
- சம அபிமானீ கூட்டமைவு
- மூச்சுக்கு மூச்சு அமைப்பு
- ஐக்கிய இடதுசாரி சக்தி
- அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம்
- Inter Company Employees’ Union