கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் ஓட்டும் உரிமம் வழங்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்துக்கு முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் ஊடகங்களுக்கு அளித்த கருத்தில், இந்த நடவடிக்கையால் அண்மைக் காலத்தில் விபத்துக்கள் அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலான வெளிநாட்டு பயணிகள் – குறிப்பாக ஐரோப்பியர் – முச்சக்கர வண்டிகளை ஓட்டி வருகின்றனர் என்றும் கூறினார்.
“இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் இதுபோன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை. ஆனால் ஐரோப்பிய பயணிகள் முச்சக்கர வண்டிகளை ஓட்டுவதால் விபத்துகள் அதிகமாகியுள்ளன,” என்றார் அவர்.

மேலும், இந்த திட்டம், சுற்றுலாத்துறையில் இயங்கி வரும் உள்ளூர் சாரதிகள் மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை இழக்கச் செய்துள்ளதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.
“அரசாங்கத்தின் இந்த முடிவால், வேலைவாய்ப்பை இழந்தவர்கள் அதிகரித்துள்ளனர். சுற்றுலாத்துறையில் இருக்கும் சாரதிகள் பலர் தங்கள் மாத வருமானத்தையும் இழந்துள்ளனர். இது அரசாங்கம் எதிர்பார்த்த விளைவா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த திட்டத்தை மீளாய்வு செய்ய அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ள முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம், அதன் எதிர்மறையான விளைவுகளை அரசு உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.








