உக்ரைன் மீது ரஷ்யா இந்த ஆண்டின் மூன்றாவது பெரிய தாக்குதலை நேற்று (21) அதிகாலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து உக்ரைன் விமானப் படை கூறியதாவது,
மேற்கு உக்ரைனை குறிவைத்து 574 ட்ரோன்கள், 40 பலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவா் உயிரிழந்ததோடு 15 போ் காயமடைந்தனா். மேற்கத்தேய நட்பு நாடுகளின் இராணுவ உதவி பொருட்கள் சேமித்துவைக்கப்பட்டுள்ள இடங்களை இலக்காகக் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று விமானப் படை தெரிவித்தது.
ரஷ்ய ஜனாதிபதி புட்டினுடன் அலாஸ்காவிலும், உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கியுடன் வெள்ளை மாளிகையிலும் ட்ரம்ப் அண்மையில் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அதையும் மீறி இந்த தீவிர தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் இராணுவ மற்றும் தொழில்துறை இலக்குகளை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும், பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை இலக்காக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதி பேச்சுவாா்த்தைகளுக்கு ரஷ்யா தயாராக இல்லை என்பதை இந்தத் தாக்குதல் காட்டுவதாக ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








