‘எளிதான வழியோ அல்லது கடினமான வழியோ, எதுவானாலும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்காக கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டியது அவசியம்,” என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ட்ரம்ப் தெரிவித்ததாவது,
கிரீன்லாந்தை பெற இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, ரியல் எஸ்டேட் ஒப்பந்தத்தில் கிரீன்லாந்தை டென்மார்க்கிடம் இருந்து விலைக்கு வாங்குவது. மற்றொன்று, இராணுவ வலிமையை பயன்படுத்தியோ அல்லது பிற அழுத்தங்கள் வாயிலாகவோ அந்த தீவை கைப்பற்றுவது.
அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நாங்கள் எதை செய்தாவது அந்த தீவை கைப்பற்றியே தீருவோம்.
எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்தை பெறுவது அவசியம். அவ்வாறு பெறாவிட்டால், ரஷ்யா அல்லது சீனா அதை கைப்பற்றி விடும்.

ரஷ்யாவோ, சீனாவோ எங்களின் அயல் நாடாக இருப்பதை நான் விரும்பவில்லை. கிரீன்லாந்தை சுற்றி, ரஷ்யா மற்றும் சீனாவின் போர்க்கப்பல்கள் வலம் வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கிரீன்லாந்தைச் சார்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் கூறியதாவது:
நாங்கள் அமெரிக்கர்களாகவும் இருக்க விரும்பவில்லை,டென்மார்க் மக்களாகவும் இருக்க விரும்பவில்லை. கிரீன்லாந்து மக்களாகவே இருக்க விரும்புகிறோம்.
எதிர் காலத்தை, நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம். கிரீன்லாந்தின் சுதந்திரம் என்பது, எங்களது தனிப்பட்ட விடயம். இதில் யாரும் தலையிட முடியாது.
கடந்த 1953 வரை டென்மார்க்கின் காலனித்துவ ஆட்சியில் இருந்த கிரீன்லாந்து, மீண்டும் மற்றொரு வல்லரசு நாடான அமெரிக்காவிடம் அடிமையாக இருக்க விரும்பவில்லை.
கிரீன்லாந்தை சுற்றி ரஷ்யா மற்றும் சீனா கப்பல்கள் சூழ்ந்துள்ளதாக ட்ரம்ப் தெரிவித்த குற்றச்சாட்டு தவறானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.








