உழவு இயந்திரங்களுடன் பொருத்தப்பட்ட வின்ச் இயந்திரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி, கரைவலை மீனவர்கள் முன்னெடுத்திருந்த சத்யாகிரகப் போராட்டம் இன்று (13) கைவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, கொக்கிளாய் உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த கரைவலை மீனவர்கள், கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
போராட்டத்தின் போது, மீனவர்கள் தமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகம் டி. கமகே, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். எனினும், அந்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வித உடன்பாட்டையும் ஏற்படுத்தாமல் தோல்வியடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, கரைவலை மீனவர்களின் கோரிக்கை தொடர்பில் இன்று (13) அநுர குமார திசாநாயக்க அவர்களுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக கரைவலை மீனவ சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், கடந்த 9 நாட்களாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சத்யாகிரகப் போராட்டம் அதிகாரபூர்வமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடற்றொழில் அமைச்சு முன்பே வெளியிட்டிருந்த அறிக்கையில், கரைவலை மீன்பிடி நடவடிக்கைகள் ஒழுங்குவிதிகளுக்குப் புறம்பாக மேற்கொள்ளப்படும்போது கடல் சூழல் மற்றும் மீன்வளத்திற்கு கடும் பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்டிருந்தது.
அதேசமயம் ஜனதிபதியுடன் வெற்றியளித்த இந்த பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏதும் வெளியாகவில்லை.








