திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்காக, பாராளுமன்றத்தின் அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (23) மீண்டும் கூடவுள்ளது.
குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு திறைசேரிச் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நிதி அமைச்சும் மத்திய வங்கியும் தனித்தனியாக அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சின் அறிக்கை ஒரு வாரத்திற்கு முன்னரும், மத்திய வங்கியின் அறிக்கை சில நாட்களுக்கு முன்னரும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த இரு அறிக்கைகளிலும் உள்ள தகவல்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, எங்கு முரண்பாடுகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தும் நோக்கில் இன்றைய கூட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதேபோன்று மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தேவையான அதிகாரிகள் அனைவரும் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ரவி கருணாநாயக்க கூறினார்.








