யாழ். மாவடத்தில் வெள்ளி, ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுகின்றன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, விதிகளை மீறி நடப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.
தனியார் கல்வி நிலைய உரிமையாளர்களுடனான சந்திப்பிலேயே அவர் இந்த தகவலைத் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, வெள்ளி, ஞாயிறு தினங்களில் வகுப்புகளை நிறுத்த ஒத்துழைப்பு வழங்குகிறோம். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியத்துக்கு பின்னர் வகுப்புகளை நடத்த அனுமதிக்குமாறு கோரப்பட்டது. அத்துடன், சாதாரண தர பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் தரம் 9இல் ஆரம்பிப்பதால் இந்த திட்டத்தால் அந்த மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் சுட்டிக்காட்டினர். மேலும், தாங்கள் வகுப்புகளை நிறுத்திய நிலையில் பிரத்தியேக வகுப்புகள் நடைபெறுகின்றன என்றும் முறையிட்டனர்.
வாரத்தின் ஏழு நாட்களும் தொடர்ச்சியாக கற்றலில் ஈடுபடுவதால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் உளப்பாதிப்பை குறைக்கவும் அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கவுமே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன், விதிமுறைக்கு கட்டுப்படாமல் பிரத்தியேக வகுப்புகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரச அதிபர் இதன் போது உறுதியளித்தார்.