ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களை ஏமாற்றுகிறார். அவர் தமிழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு தரமாட்டார். அவரிடம் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது என்று எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) ஆகிய கட்சிகள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ்க் கட்சிகள் நடத்திய சந்திப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸ, ஜே.வி. பி. தலைவரான அநுரகுமார திஸநாயக்க ஆகியோர் கருத்து வெளியிடும்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறினர். சஜித் பிரேமதாஸ கருத்துரைக்கையில், ராஜபக்ஸக்கள் போல ரணில் விக்கிரமசிங்கவும் தமிழர்களை ஏமாற்றியே தீருவார்.
அவரை நம்பி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் பேச்சுக்கு செல்வதால் எந்தப் பயனும் இல்லை. ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில்தான் தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை – இந்த நாட்டின் மக்கள் ஒருமித்து விரும்பும் தீர்வை பெற முடியும். எனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை நிறுவுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – என்றார். இதேபோன்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸநாயக்க கூறுகையில், தான் ரணில் ராஜபக்ஸ அல்ல ரணில் விக்கிரமசிங்கதான் என தமிழ் மக்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் கூறியது நகைப்புக்குரியது. தற்போது ரணில் – ராஜபக்ஸ அரசாங்கம்தான் ஆட்சியில் உள்ளது. ராஜபக்ஸக்கள் பட்டாளத்தின் ஆசியில்தான் ஜனாதிபதி கதிரையில் ரணில் விக்கிரமசிங்க இருக்கிறார். எனவே, ராஜபக்ஸக்களின் குணாதிசயங்கள் ரணிலிடம் உண்டு. அவரிடம் தமிழ் மக்கள் – அவர்களின் பிரதிநிதிகள் தீர்வை எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது – என்று கூறினார்.