ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தெளிவான ஆணையை வழங்கியிருப்பதால், அடுத்த உள்ளூராட்சித் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு அதிக பலம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
பெரும்பான்மை கருத்துக்கு அடிபணிவது ஜனநாயகம் என்றும், தேசிய மக்கள் சக்தி மீது மக்களுக்கு நம்பிக்கை இருப்பதால், அவர்கள் பணியை தொடர அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆனால் ஜனதா விமுக்தி பெரமுன தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் கருத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஏற்பாடு செய்யும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக வாக்களித்தவர்களையும், வாக்களிக்கச் செல்லாதவர்களையும் ஒன்று சேர்க்கும் போது, அங்குதான் பெரும்பான்மை உள்ளது என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும் சாகர காரியவசம் மேலும் தெரிவித்தார்.