ஜனாதிபதியின் புதுடில்லி பயணம் தமிழ் சூழலில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. தமிழ் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அப்பால் தமிழ் சிவில் சமூகத்தின் மத்தியிலிருந்தும் இந்தியாவை நோக்கி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் கட்சிகளின் கடிதத்தில் குழப்பகரமான நிலைப்பாடுகள் இருந்தாலும் கூட அனைவரும் இந்தியாவின் தலையீட்டை கோருகின்றனர்.
இந்தியாவை நோக்கிச் செல்லும்போது முன்வைக்கப்படும் ஒரு கேள்வி – ஏன் இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டும்? இந்தக் கேள்வி நியாயமானது. ஒரு நாட்டுக்குள் தீர்த்துக் கொள்ள வேண்டிய விவகாரத்தை எதற்காக இன்னொரு நாட்டை நோக்கிச் செல்ல வேண்டும்? இலங்கையின் பிரச்னையை இலங்கைக்குள் தீர்த்துக்கொள்ள முடியாமல் போனமையின் காரணமாகவே வெளியாரை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கின்றது.
யுத்தத்துக்குப் பின்னரான, கடந்த 14 வருடகால தமிழர் அரசியல் முற்றிலும் வெளியாரை நோக்கியதாகவே இருந்தது. இந்த நிலையில்தான் இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாததாகும். ஏனெனில், இந்த விடயத்தில் ஏனைய – எந்தவொரு நாட்டுக்கும் இல்லாத ஒரு தகுதி இந்தியாவுக்கு உண்டு.
ஏனெனில், இந்திய – இலங்கை ஒப்பந்தம் அதற்கான அடித்தளத்தையும் உரித்தையும் வழங்குகின்றது. இந்தப்
பின்புலத்தில்தான் இந்தியா தொடர்ந்தும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி வருகின்றது. இலங்கை 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த மறுக்கும்போது அடுத்ததாக யாரை நோக்கிச் செல்ல வேண்டும்? இந்தியா தவிர்த்து வேறு எவரிடம் சென்று முறையிடுவது? இந்த பின்புலத்தில்தான் இந்தியாவை நோக்கிய கோரிக்கைகள் அவசியப்படுகின்றன. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பங்காளி என்னும் வகையில் ஒரு பங்காளியான இலங்கை அதன் பொறுப்பை நிறைவேற்றாதபோது அடுத்த பங்காளியிடம்தான் செல்ல முடியும்?
இந்தியாவைப் பொறுத்தவரையில் இலங்கையின் விடயத்தில் கசப்பான அனுபவங்கள் உண்டு. குறிப்பாக தமிழர்கள் தொடர்பில். ஏனெனில், முன்னைய அனுபவங்கள் இந்தியாவுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதல்ல. மாறாக, சங்கடத்துக்குரியது. இந்தப் பின்புலத்தில்தான் இந்தியாவும் விடயங்களை எடுத்த எடுப்பில் கையாள முடியாத நிலையிலிருக்கின்றது. ஆனாலும் இந்தியா அதன் அழுத்தங்களை சற்று தீவிரப்படுத்த வேண்டும்.
இந்தியாவுக்கு அந்தப் பொறுப்பு உண்டு. கடந்தகாலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் அதிருப்திகள் இருந்தாலும்கூட, இந்தியா தமிழர் பிரச்னையில் மீண்டும் ஒரு மூன்றாம் தரப்பாக தலையீடு செய்ய வேண்டும். இந்தியா முன்னரைப் போன்று நேரடியாக தலையீடு செய்யாவிட்டால் இலங்கை அரசாங்கம் முன்னேக்கிப் பயணிக்காது. அழுத்தங்கள் இன்றி இலங்கையின் ஆட்சியாளர்கள் செயல்பட்டதாக
வரலாறில்லை. இதனை இந்தியா நன்கறியும்.