போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 32 வயதுடைய தபால்காரரே இவ்வாறு கைதாகியுள்ளார். சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து மீட்கப்பட்ட நிலையில், அவை 20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதி என பொலிஸார் கூறியுள்ளனர்.
தபால்காரர் , சீருடையுடன் சுற்றித்திரிந்து போதைப்பொருளை விநியோகிப்பதாகவும், பொரளை வனாத்தமுல்லை பகுதியில் அவர் சுற்றிதிரிவதாகவும் கிடைத்த தகவலுக்கு அமைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
விசேட பொலிஸ் குழுவினர் சந்தேக நபரை கைது செய்ததுடன், சோதனையின் போது, கடிதப் பையில் கடிதங்களுக்கு மத்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் கொட்டாஞ்சேனை வீட்டில் விசேட சோதனைகளை மேற்கொள்வதற்காக நேற்று (03) இரவு விசேட பொலிஸ் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.