நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி நிதி மோசடிகள் இடம்பெற்று வருவதாகவும் அவ்வாறு பொய்கூறி வருபவர்களை நம்ப வேண்டாம்.
என பொதுஜன பெரமுனவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்று வந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு மேலும் கீதநாத் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் நாமல் ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி காணி பிடிப்பது, கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வந்தனர் என்ற குற்றச்சாட்டு காணப்படுகின்றது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களது வீடுகளுக்கு சென்று நாங்கள் விசாரிப்பது வழமை.
அப்படி ஒரு வீட்டுக்கு சென்றது சம்பந்தமாக தான் எனக்கு எதிராக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு வந்தது.
இதன்போது மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இன்று (04) விசாரணைகளை மேற்கொண்டவேளை அவருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கியதோடு, நாங்கள் சென்று கலந்துரையாடிய பாதிக்கப்பட்டவர்கள் எமக்கு எவ்வாறான முறைப்பாடுகளை அல்லது குற்றச்சாட்டுகளை வழங்கினர் என பொறுப்பதிகாரிக்கு தெரியப்படுத்தினேன்.
எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இப்படியான மோசடிகள் செய்பவர்கள் தொடர்பாக மக்களாகிய நீங்கள் கட்டாயம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய வேண்டும்.
அப்படி ஏதாவது உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
நாங்கள் யாழ்ப்பாணத்தில் முழுநேர அரசியலில் ஈடுபட ஆரம்பித்திருக்கின்றோம். கடந்த காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் தான் எமது கட்சியின் தோல்விக்கு காரணமாக அமைந்திருக்கின்றது என நான் நினைக்கின்றேன். அந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை களைய வேண்டியது எனது கடமையாக இருக்கின்றது.
நாமல் ராஜபக்ச வெளிநாடுகளுக்கு அனுப்புகின்றார், நாமல் ராஜபக்ச தங்கம் வியாபாரம் செய்கின்றார் போன்ற பொய்யான தகவல்களை சிலர் பரப்பி மோசடிகளை செய்து வருகின்றனர்.
இது தொடர்பாக என்னையும் சில தொடர்பு கொண்டு, கேட்டு நாமல் ராஜபக்சே தங்கம் வியாபாரம் செய்கின்றாரா? என கேட்டுள்ளனர்.
நான் அப்படி எதுவும் இல்லை என அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன்.
இப்படியானவர்களை மக்களாகிய நீங்கள் நம்ப வேண்டாம்.
எமது கட்சியின் பெயரை பயன்படுத்தி இவ்வாறு குற்றச் செயல்களை செய்கின்றவர்களை கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அதிகாரம் எனக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.