இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் எதிர்வு கூறுகின்றனர்.
வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரியால் வாகனங்களின் விலை உயரும் என்றும் கூறுகின்றனர்.
வாகன இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அடுத்த ஆண்டு (2025) முதல் வாகன இறக்குமதிக்கான வாய்ப்பை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், இலங்கையின் பிரதான வாகன இறக்குமதி நிறுவனங்களின் பத்திரிகை விளம்பரங்களை வெளியிடுவதும் இந்த நாட்களில் அதிகரித்துள்ளது.
இந்த விளம்பரங்களினால் சந்தையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனை மற்றும் அவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பயன்படுத்திய வாகனங்களை விட புதிய இறக்குமதி வாகனங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதாக விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
எனினும், இந்த பத்திரிகை விளம்பரங்களில் வெளியாகும் விலையில் வாகனங்களை வாங்க முடியாது என இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர். வாகன இறக்குமதி வரி அதிகரிப்பே இதற்கு காரணம் என்கின்றனர்.
இதனால், 80 முதல் 100 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனை செய்யப்பட்ட Toyota RAIZE கார் சுமார் 170 லட்சம் ரூபாய் என்றும், 40 முதல் 50 லட்சம் ரூபாய் வரை விற்கப்பட்ட AQVA கார் 100 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் இறக்குமதியாளர்கள் கூறுகின்றனர்.
BEZZA கார் 2020க்கு முன் சுமார் 30 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதன் புதிய விலையும் 75 லட்சம் ரூபாயை தாண்டியுள்ளது.
மேலும், 1500ccக்கு மேல் எஞ்சின் திறன் கொண்ட கார்களின் விலை 150 லட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் உயரும் என்று கூறப்படுகிறது.
விரைவில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அரசாங்கத்திடம் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும் வாகன இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.