நோர்வூட் காவல்துறை பிரிவிற்குட்பட்ட நியூட்டன் தோட்டத்திலுள்ள மரத்தடியில் சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு சென்ற நபரொருவரின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மரத்தடியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் ஹட்டன் டிக்கோயா மாணிக்ய வத்தை 3ஆம் கட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம் நகுலேஸ்வரன் (வயது 49) என உயிரிழந்தவரின் சகோதரரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் கடந்த மாதம் (24) காலில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த தனது சகோதரன் சிகிச்சைக்காக திக் ஓயா ஆரம்ப வைத்தியசாலைக்கு சென்றதாகவும், அன்றைய தினம் முதல் தனது சகோதரர் காணாமல் போனதால் ஹட்டன் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் உயிரிழந்தவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
மூன்றடி உயரமுள்ள வெட்டப்பட்ட யூகலிப்டஸ் மரத்தில் தொங்கிய சட்டையில் கண்டெடுக்கப்பட்ட எலும்புத் துண்டுகள் அவரது சகோதரனுடையது என இறந்தவரின் சகோதரர் அடையாளம் கண்டுள்ளார்.
இந்நிலையில் நியூட்டன் தோட்டத்தில் புல் வெட்டச் சென்ற நபர் ஒருவர் மரத்தின் அடியில் இருந்த எலும்புக் கூடுகளை கண்டு அட்டன் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.
இந்த பின்னணியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் தொடர்பில் ஹட்டன் காவல்துறையினர் பல திணைக்களங்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது இயற்கை மரணமா, கொலையா அல்லது தற்கொலையா என ஹட்டன் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.