தேசிய மக்கள் சக்தி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வேலையற்ற பட்டதாரிகள் நியமனம் தொடர்பில் தெரிவித்த விடயங்களை நடைமுறைப்படுத்தவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளினால் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தி இன்றைய தினம் (13) மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வேலையற்ற பட்டதாரிகளின் அரச நியமனத்தினை உறுதிப்படுத்து, காட்டாதே காட்டாதே பாரபட்சம் காட்டாதே, அழிக்காதே அழிக்காதே எங்களது கனவுகளை அழிக்காதே, வயது ஏறுது வாழ்க்கை போகுது வேலைவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு இந்தபோராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கடந்த அரசாங்க ஆட்சியின்போது ஜுலை மாதம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தபோது அன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் வழங்கிய உறுதிமொழியையடுத்து போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியபோதிலும் இதுவரையில் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லையென வேலையற்ற பட்டாதாரிகள் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்த வரையில் 2000க்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் உள்ளபோதிலும் அவர்களுக்கான நியமனங்கள் குறித்து இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென இங்கு பட்டதாரிகளினால் கவலை தெரிவிக்கப்பட்டது.
பல்வேறு கனவுகளுடன் தாங்கள் பட்டங்களை பூர்த்திசெய்தபோதிலும் இன்று வரையில் தமது கனவுகள் கனவுகளாகவே போகும் நிலை காணப்படுவதாகவும் பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் பட்டங்களை முடித்துள்ள போதிலும் இதுவரையில் தமது வேலைவாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லையெனவும் அவர் தெரிவித்தார்.





