சபாநாயகர் அசோக ரன்வெலவின் பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய வழிவகுத்தது, எதிர் கட்சிகள் மேலும் ஐந்து அரசாங்க அமைச்சர்களின் கல்வித் தகுதிகள் மற்றும் முனைவர் பட்டங்கள் குறித்து கடுமையாக சந்தேகங்களை எழுப்பியுள்ளன.
அதனடிப்படையில் நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் அநுர கருணாதிலக்கவின் கல்வித் தகுதி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடியின் பொறியியல் பட்டம் குறித்த கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
மேலும், அந்த அரசியல் கட்சிகள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் அவர்களின் கல்வித் தகுதி குறித்த தகவல்களைப் பெறுவதற்காக தற்போது முயற்சிகளை செய்து வருகின்றன.
இதனிடையே, தேசிய மக்கள் கட்சியின் சில அமைச்சர்கள் தமது முகநூலில் பதிவிட்ட சில கல்வித் தகுதிகளை திடீரென நீக்கியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
எனினும், அந்த முகநூல் கணக்குகளின் வரலாற்று பகுதியைச் சரிபார்க்கும் போது, சில நாட்களுக்கு முன்னர் அந்த தகவல்கள் நீக்கப்பட்டவை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் பொதுத் தேர்தல் பிரசாரப் பதாகைகள் மற்றும் சுவரொட்டிகளில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கல்வித் தகுதிகளை தெளிவாகக் குறிப்பிட்டுயிருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.