சர்வதேச விமானத்தில் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட இலங்கையைச்சேர்ந்த நபர், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் வியாழக்கிழமை (19) மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து புதன்கிழமை (18) மெல்பேர்னுக்கு பயணமான விமானத்தில் 41 வயதான ஆண் ஒருவர் பெண் பயணியிடம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்டிருக்கிறார். அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் குறித்த பெண் விமானசேவை ஊழியர்களுக்கு அறியப்படுத்தியதுடன், அவர்கள் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸில் முறைப்பாடளித்தனர். அதன்படி குறித்த விமானம் மெல்பேர்னில் தரையிறங்கியவுடன் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் இச்சம்பவம் பற்றி பயணிகளிடமும், விமானசேவை ஊழியர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அவுஸ்திரேலியாவின் 1991 ஆம் ஆண்டு குற்றங்கள் (விமானசேவை) சட்டத்தின் 15(1) சரத்தின் பிரகாரம் அநாகரிகமான முறையில் நடந்துகொண்ட குற்றத்துக்காக குறித்த நபருக்கு எதிராக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அதன்படி நேற்றைய தினம் (19) மெல்பேர்ன் நகரின் ப்ரோமேடோஸ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மேற்படி நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், எதிர்வரும் 2025 ஜனவரி 9 ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.