ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் இதுவரை வெளிவராத பல உண்மைகள் வெளிவருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களை கொன்றது புலிகளின் செயல் என்று காட்ட முயற்சிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களையும் கொலை செய்தது, புலிகளின் செயல் என்று காட்ட, கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் வீட்டில் இருந்த ஆடையொன்றை வைத்துவிட்டு, அவரின் கைது தொடர்பில் விசேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்தோடு, காவல்துறை உத்தியோகத்தர்களின் படுகொலை மற்றும் துப்பாக்கி கடத்தல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறை உத்தியோகத்தர்கள் மீதும் சில உயர் அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறை பிரிவில் கடமையாற்றும் அதிகாரிகளிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் காவல்துறை அதிபர்களாக கடமையாற்றிய பல அதிகாரிகளிடம் விசாரணை நடத்த குற்றப்புலனாய்வு திணைக்களம் தயாராகவும் கூறப்படுகிறது.