மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் யாராவது தனியார் வைத்தியசாலையினை மேம்படுத்துவதற்காக போதனா வைத்தியாசாலையில் செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பாரானால் அது தொடர்பான விசாரணைகளை நடாத்தி அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் பல்வேறு குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்றைய தினம் (24) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று விசேட கூட்டம் ஒன்றை நடாத்தினார்கள்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், டாக்டர் இ.சிறிநாத் ஆகியோர் இதன்போது கலந்துகொண்டனர்.
இந்த கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி டாக்டர் க.கலாரஞ்சனியினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் முரளீஸ்வரன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் திருமதி மைதிலி மற்றும் போதனா வைத்தியசாலையின் முக்கிய வைத்திய அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் முக்கிய வைத்திய அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் போதனா வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பிலும் நிர்வாக சிக்கல்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்காலத்தில் அவற்றினை நிவர்த்தி செய்வதற்கும், முடியாத பிரச்சினைகளை சுகாதார அமைச்சு மட்டத்தில் கொண்டுசென்று கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதுடன் வைத்தியசாலையின் நிலைமைகள் தொடர்பில் தொடர்ந்து கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தினை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன்,டாக்டர் இ.சிறிநாத் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் நடாத்தினார்கள்.
இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்,
கடந்த ஒரு சில வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் ஊடகங்களிலே போடப்பட்டிருக்கின்றது அந்த வகையில் 17 விடயங்கள் சிலை வைத்த பிரச்சினைகள் உட்பட நோயாளிகள் சார்ந்த பிரச்சனைகள் என மொத்தமாக 17 விடயங்கள் சம்பந்தமாக இக் கலந்துரையாடல்களை முன்னெடுத்து இருந்தோம்.
நாங்கள் முறையாக வந்து எவ்வாறு வைத்தியசாலையின் பிரச்சினையை அணுக வேண்டுமோ அவ்வாறே இன்று வருகை தந்து அந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடி இருக்கின்றோம்.
இந்த வைத்தியசாலையில் ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான நோயாளிகளை பார்க்கும் ஒரு வைத்தியசாலை அந்த வகையில் இந்த வைத்தியசாலையின் மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் வகையாக 17 விடயங்களை வைத்துக்கொண்டு செயல்படக்கூடாது என்பதற்காக நாங்கள் முறையாக வந்து இவர்களை சந்தித்து இந்த விடயங்களை கலந்துரையாடி இருக்கின்றோம்.
மிக முக்கியமாக எம் ஆர்; ஐ. ஸ்கேனர் தொடர்பான விடயம் கூடுதலாக ஊடகங்களில் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த எம் ஆர் ஐ ஸ்கேனரை ஒரு நலன் விரும்பி இந்த மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு வழங்குவதாக இருந்ததாகவும் இதனை வைத்தியசாலையில் இருக்கும் பணிப்பாளர் தர வேண்டாம் என கூறியதாகவும் அந்த ஒரு விடயம் கூறப்பட்டுள்ளது.
நாங்கள் அந்த நலன் விரும்பியிடமும் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டு அதில் கூறப்பட்ட விடயம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற எம். ஆர். ஐ இயந்திரத்திற்கும் நலன் விரும்பி வழங்க இருக்கும் எம் ஆர் ஐ இயந்திரத்திற்கும் சற்று வித்தியாசம் அந்த வகையில் அது தொடர்பான நியாயங்களை அதிகாரிகள் கூறியிருக்கின்றார்கள்.
நாங்கள் அந்த நலன் விரும்பியுடன் பேசுவதற்கு தீர்மானித்து இருக்கின்றோம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அவர் வழங்குகின்ற இயந்திரத்தின் தரம் போதாமல் இருந்தால் அதனை களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கோ அல்லது வாழைச்சேனை வைத்தியசாலைக்கோ இதை வழங்குவதற்கு நாங்கள் அவரிடம் பேசலாம்.
ஒன்பது இலட்சம் டொலர் பெறுமதியான இயந்திரத்தினை அவர் வழங்குவதாக இருக்கின்றார் ஆனால் வைத்தியசாலைக்கு தேவைப்படுகின்ற இயந்திரத்தின் பெறுமதி 30 லட்சம் டொலர் பெறுமதியானது.
அத்தோடு முக்கியமாக இ.என்.டி சேர்ஜன் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் உயிர் அச்சுறுத்தல் வரும் என ஒருவர் முகநூலில் காணொளி பதிவிட்டதற்காகவும் அது தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. அது தொடர்பாக உடனடியாக ஒரு விசாரணையை நடத்தி அந்த விசாரணையின் ஊடாக அதனை கூறியவர்கள் யார்? அவ்வாறு இந்த வைத்தியசாலையில் வைத்தியர்கள் கூறி இருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான உடனடியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அத்தோடு தனியார் வைத்தியசாலைகளை அவர்களுடைய வருமானத்தை அதிகரிக்கும் வகையில் யாராவது செயல்பட்டால் அவர்களைப் பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எங்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்பதனை கூறி இருக்கின்றோம்.
சில நேரங்களில் இந்த வைத்தியசாலையில் செய்யக்கூடிய சிகிச்சையை விட செய்யக்கூடிய வேகத்தை விட அதிக வேகத்தில் சிகிச்சை செய்ய வேண்டும் என்று சுய விருப்பத்தின் பேரில் தனியாரை தேடிப் போகின்றவர்களும் இருக்கின்றார்கள். நாங்கள் வைத்தியசாலையை நியாயப்படுத்த வரவில்லை அவர்கள் அதற்கான விளக்கங்களை கொடுத்திருக்கின்றார்கள். நாங்கள் அவர்களிடம் கூறி இருக்கின்றோம் அவர்களுக்கும் ஒரு ஊடக சந்திப்பை நடத்தி இந்த விடயங்கள் தொடர்பாக பூரணமான மக்களுக்கு தெளிவுபடுத்தலை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அத்தோடு நாங்கள் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வின் போது சுகாதார அமைச்சரை சந்தித்து ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியின் கீழே மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கத்லப் அதாவது மார்பக சிகிச்சை செய்யக் கூடிய ஒரு இயந்திரம், சி டி ஸ்கேனர் மற்றும் எம் ஆர் ஐ இயந்திரம் ஆகிய மூன்று விடயங்களையும் ஆசிய அபிவிருத்தி வாங்கிய நிதி உதவியில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கொண்டுவருவதற்கு பேச இருக்கின்றோம்.
கடந்த காலத்தில் உங்களுக்கு தெரியும் மட்டக்களப்புக்கு என வந்தது களுத்துறை மாவட்டத்திற்கு சென்றுள்ளது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது நாங்கள் அந்த நேரத்தில் இருந்த அபிவிருத்தி குழு தலைவர் போன்றவர்களுக்கு மௌனமாக இருந்ததற்கு விமர்சனங்களை முன் வைத்தோம். அந்த வகையில் இம்முறை ஆசிய அபிவிருத்தி வாங்கிய நிதி உதவி ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எவ்வாறு ஆயினும் அந்த உபகரணங்களை கொண்டுவருவதற்கு நாங்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வைத்தியசாலை சம்பந்தமாக எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எழுதுவதற்கு முன்னர் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு சார்பாக தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் இருக்கின்றார்கள் அத்தோடு சேர்ந்து எங்களுடன் பயணிக்கும் பலர் இருக்கின்றார்கள் நீங்கள் முகநூலில் எழுதுவதற்கு முன்னர் எங்களுடன் தொடர்படுங்கள் நாங்கள் நேரடியாக உங்களின் சார்பில் இது தொடர்பான விடயங்களை பேசுவோம்.
எவருமே வைத்தியசாலையை வைத்துக்கொண்டு அரசியல் இலாபம் அடைவதற்கு நாங்கள் அனுமதிக்க போவதில்லை. என்றார்.