AHRC மற்றும் PCCJ அமைப்புகளின் ஏற்பாட்டில் சம்பூர், 64ம் கட்டை ஆகிய பகுதிகளில் காணி ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு உரித்தான காணிகளை மீளப்பெறுவதற்காகவும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காணி ஆக்கிரமிப்பை தவிர்த்துக் கொள்வதற்குமான சட்ட முன்னெடுப்புகள் தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் பயிற்சி செயலமர்வும் சட்ட ஆவணங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தலும் வளவாளர் சந்திரகுமார் அவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த செயலமர்வு மூதூர் பிரதேச சபை மண்டபத்தில் நேற்று (23) இடம்பெற்றது.
இதன்போது ஆவணங்கள் பரிசீலனை செய்து பொருத்தமான ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான தெளிவுபடுத்தல்கள் வழங்கப்பட்டதோடு, இல்லாத ஆவணங்களை பெற்றுக் கொள்வதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. அத்துடன் அவர்களின் உரிமைகளை கோருவதற்காகவும் அவர்களின் எல்லைகள் மற்றும் வரலாற்று ரீதியான அடையாளங்களை பாதுகாக்கும் நோக்கில் பாதிக்கப்பட்டவர்களின் பங்குபற்றுதலுடன் குறித்த செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது.
குறித்த செயலமர்வில் AHRC நிறுவனத்தின் பிரதி இணைப்பாளர், உதவி கணக்காளர், கள இணைப்பாளர் மற்றும் கிராம தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.