மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு தமிழரசு கட்சியினர் சென்று பிரச்சனைகள் தொடர்பிலும், அங்கு தற்போது காணப்படுகின்ற குறைநிறைகள் பற்றியும் ஆராய்ந்துள்ளனர்.
இது ஒரு நல்லவிடயமாக தெரிந்தாலும் திடீரென தமிழரசு கட்சியின், குறிப்பாக சாணக்கியனின் பார்வை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மீது நோக்கப்பட்டமை மக்களுக்காக அல்லாமல் எதிர்கால திட்ட அரசியல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்படும் வியூகங்களாக பார்க்கப்படவேண்டிய ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.
கடந்த 6 வருடத்தில் மட்டும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் ஏராளமான குற்றச்சாட்டுகள். வைத்தியர்கள் சரியாக வைத்தியம் பார்ப்பதில்லை என்றும் , அங்கு பணிபுரியும் வைத்தியர்கள் நோயாளிகளிடம் சரியாக நடந்து கொள்வதில்லை என்றும், ஏன் ஒருமுறை சுவிஸ் கிராமத்தை சேர்ந்த சாந்தகுமார் இப்சிபா என்னும் பாடசாலை மாணவி ஒருவர் முகத்தில் தோல் வைத்தியம் பார்க்க சென்று, வைத்தியசாலையில் வழங்கப்பட மாத்திரையை சில நாட்கள் பாவித்து இறந்து போனார். அதற்கு காரணம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தவறான மருந்து கொடுத்து தனது பிள்ளையை கொன்றுவிட்டது என்றும் அவரது பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்திருந்தனர்.
ஏன் குளவி குத்தியவருக்கு காலை கழட்டுமளவிற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிகிட்சையின் தரம் உள்ளது என்ற குற்றச்சாட்டு, கிரான்குளத்தை சேர்ந்த 35 வயதுடைய சின்னத்தம்பி சுபாஸ்ஜினி என்னும் பெண் மகப்பேற்றுக்காக வந்து உயிரிழந்த சம்பவம், அதுமட்டுமல்லாது காங்கேயனோடை மாணவி ஜப்றாவிக்கு 2 மில்லிக்குப் பதிலாக 20 மில்லி மருந்தை வழங்குமாறு வைத்தியர் கூறி குறித்த மாணவி உயிரிழந்த விவகாரம் என பல குற்றச்சாட்டுகளை அடிக்கிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு பல குற்றச்சாட்டுகள் போதனா வைத்தியசாலை தொடர்பில் முன்வைக்கப்பட்டாலும், மரணங்களுக்கு வைத்தியசாலை பக்கம் இருந்து வேறொரு காரணம் கூறப்பட்டு அந்த பிரச்சனை அவ்விடத்திலேயே முடித்துவிடும் நிலையே காணப்பட்டது.
இந்த இடத்தில் இந்த விடயங்களை நாங்கள் சொல்ல வந்த காரணம், பல்வேறு மரணங்கள், பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் இதுவரைகாலமும் முன்வைக்கப்பட்ட போதும் இந்த பிரச்சனைகள் தொடர்பில் ஏதாவதொரு ஊடகசந்திப்பில் ஒரு ஊடகவியலாளர் இதை பற்றி “உங்கள் கருத்து என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை மேற்கோள் காட்டி கேட்கும் போது” இது தொடர்பில் அங்கு பேசுகிறேன், இங்கு பேசுகிறேன், அங்கு பேசியிருக்கிறேன் என்று கூறியிருந்த தமிழரசு கட்சியினர் திடீரென மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்று குறைநிறைகளை பற்றி ஆராய்வது, தமிழரசு கட்சியினருக்கு அர்ச்சுனா காய்ச்சல் பிடித்துவிட்டதா அல்லது, அர்ச்சுனாவால் பயம் பிடித்துவிட்டதா என்ற கோணத்திலிருந்து இந்த பார்க்கவேண்டிய நிலைமையை தோற்றுவித்துள்ளது.
வடகிழக்கை பொறுத்தவரையில் தமிழரசு கட்சியினரின் வாக்குவங்கி உடைந்துவிட்டது என்றே கூறலாம். அதற்கு நடந்து முடிந்த பொது தேர்தலை தவிர மேலதிக சாட்சிகள் தேவைப்படாது.
ஆனால் அர்ச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்னைகளை பற்றி முகநூலில் பேசி, மிகவும் குறுகிய காலத்திற்குள் எம்.பி ஆக மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒருவர். ஒருவேளை இந்த உக்தியை பயன்படுத்தி தமிழரசு கட்சி அடுத்த தேர்தல்களுக்காக நகர்த்தும் ஒரு அரசியல் நகர்வாகவும் இது பார்க்கப்படவேண்டியுள்ளது.
இதைவிட இரண்டாவது விடயம் மிகவும் பொருத்தமானதாக இங்கு ஆராயப்படவேண்டியும் உள்ளது.
ஒரு முறை அர்ச்சுனா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், தன்னை அங்கு வந்து ஆராயுமாறும் சிலர் அழைப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஒருவேளை அர்ச்சுனா இங்கே வந்து, பிரச்சனைகள் தொடர்பில் பேசிவிட்டால் மட்டக்களப்பில் தற்போது சில பொதுமக்களிடையே காணப்படும் குறைந்தளவிலான அர்ச்சுனா காய்ச்சல் மேலும் அதிகரித்துவிடும் என பயந்து, நாம் முந்திக்கொள்வோம் என் தமிழரசு கட்சு முந்திக்கொண்டதோ என்றும் பார்க்கப்படவேண்டியுள்ளது.
இதை விட மூன்றாவதாக இன்னொமொரு விடயம் தொடர்பிலும் தமிழரசு கட்சி பயந்திருக்க வாய்ப்பு காணப்படுகிறது. அதற்கு காரணம் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி.
தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமக்கள் தங்கள் பிரச்னைகளை இங்கு வந்து முறையிடலாம் என்று இரண்டு நாட்களுக்கு முன் மட்டக்களப்பில் ஒரு அலுவலகம் திறக்கப்பட்து.
இந்த விடயமும் தமிழரசு கட்சியை பாதித்திருக்கக்கூடும் என்றும் எண்ணத்தோன்றுகிறது.
கரணம் தேசியமக்கள் சக்தி கடந்த பொதுத்தேர்தலில் மட்டக்களப்பை தவிர வடகிழக்கில் பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றிருந்தது. தமிழ் மக்கள், தமிழ் கட்சிகள் மீது நம்பிக்கையிழந்து வரும் இந்த நிலையில், ஒருவேளை தேசியமக்கள் சக்தியின் இந்த நகர்வு மட்டக்களப்பிலும் தமிழரசு கட்சியை பாதித்துவிடும் என்றும் நினைத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விஜயம் மேற்கொள்ளப்பட்டதொ என்றும் எண்ணத்தோன்றுகிறது.
தமிழரசு கட்சியின் நேற்றைய (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விஜயத்தின் போது சாணக்கியன் “மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையை வைத்து யாரும் அரசியல் செய்யவேண்டாம்” என்று கூறியிருந்தார். அரசியல் செய்வது அது தமிழரசு கட்சியாக இல்லாமல் இருந்தால் சரி…………
மாயவன்