அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவுக்கு தெளிவுபடுத்தினார் என்று வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.
இந்திய விஜயத்தை முடித்துகொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை
தூதுக்குழுவினர் நேற்று முன்தினம் இரவு நாடு திரும்பினர்.இந்நிலையில் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுலாக்கவேண்டும் என்பதே இந்தியா வின் நிலைப்பாடாக உள்ளது, இது விடயத்தை இந்தியா எவ்வாறு அணுகும் என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக் கையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு கூறினார்.
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியாவுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பொலிஸ் அதிகாரம் தொடர்பில் தன்னால் தனித்து முடிவெடுக்க முடியாது, கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றி ஆராய்ந்து முடிவெடுக்கப் படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிகாரம்தவிர ஏனையவற்றை அமுல்படுத்துவதற்கான எதிர்பார்ப்பு உள்ளது.” எனவும் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கு எதிர் வரும் 26 ஆம் திகதிக்கு முன்னதாக
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டவுள்ளார் என தெரியவருகின்றது.