கல்முனையிலிருந்து கட்டுநாயக்க பயணித்த அரச பேருந்து ஒன்றில் பயணித்த பயணி ஒருவருக்கு திடீர் என வலிப்பு ஏற்பட்டதையடுத்து குறித்த நடத்துனர் நோயாளியை இடைநடுவே இறக்கிவிட்டு செல்ல முயன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கல்முனையிலிருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளுடன் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் காத்தான்குடி பகுதியை கடந்து நாவற்குடா ஊடாக குறித்த பஸ் சென்று கொண்டிருக்கும் போது பயணி ஒருவருக்கு திடீரென வலிப்பு வந்துள்ளது.
இந்த நிலையில் நடத்துனர் சிவானந்தா மைதானத்திற்கு முன்பாக நோயாளியை போட்டுவிட்டு செல்ல முயன்றுள்ளார். இதை அவதானித்த பிற பயணிகள் நடத்துனருடன் முரண்பட்டு, வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு செல்லுவோம் அல்லது முச்சக்கரவண்டி ஒன்றில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல கேட்டுப்பார்ப்போம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு இதனால் நேர விரயம் ஆகும் என்று மனிதாபினம் அற்று நடத்துனர் பேசியுள்ளதாக கூறப்படுகிறது, அப்போது மேலும் பயணிகள் முரண்பட்டதால் அருகில் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் குறித்த சாரதி நோயாளியை இறக்கி விட்டு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் கல்முனை டிப்போவை தொடர்ப்பு கொண்டு கேட்டபோது, பாதிக்கப்பட்டவர், அல்லது பொலிஸார் வந்து முறைப்பாடு செய்தால் மட்டுமே நாங்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்போம் என்றும், முகநூலில் வரும் காணொளி வைத்து தொலைபேசியில் பேசுவதனால் எங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாது என்று குறிப்பிட்ட அவர், மேலதிக தகவல்கள் வேண்டுமென்றால் நேரடியாக ஆவணங்களுடன் வருமாறு தெரிவித்தார்.
அதற்கு நாங்கள், குறித்த நபர் ஒருவேளை இறந்து போயிருந்தால் எவ்வாறு உங்களிடம் வந்து முறையிடமுடியும் என்று கேட்ட போது, “அவர் இறக்கவில்லை” என்று பதில் வழங்கினார்.
இது தொடர்பில் மட்டக்களப்பு சமூக ஆர்வலர் ஒருவர் காணொளி மூலம் நடந்த சம்பவத்தை வெளியிட்டு விசனம் தெரிவித்துள்ளார்.
(அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா?)