2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தாய்லாந்தில் இருந்து வருகை தந்த தம்பதியொன்றே சுற்றுலாப் பயணிகளின் இரண்டு மில்லியன் எண்ணிக்கையைப் பூர்த்தி செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த ஜனவரியில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த ஆண்டுக்குள் இரண்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு ஈர்த்தெடுப்பதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அதன் பலனாக தற்போதைக்கு குறித்த எண்ணிக்கையை இலங்கை எட்டியுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டின் பின்னர் வீழ்ச்சியுற்ற சுற்றுலாத்துறையானது கடந்த ஆண்டில் படிப்படியாக வளர்ச்சி பெறத் தொடங்கி, இந்த ஆண்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது.
அதன் பிரகாரம் இந்த ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில், டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை மாத்திரம் 161,383 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்தே அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளனர்.
இந்தியாவிலிருந்து 35,131 சுற்றுலாப் பயணிகள் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ரஷ்யாவிலிருந்து 22,637 சுற்றுலாப் பயணிகளும் பிரித்தானியாவிலிருந்து 12,822 பேரும், ஜெர்மனியிலிருந்து 9,998 பேரும் அவுஸ்திரேலியாவிலிருந்து 8,646 சுற்றுலாப் பயணிகளும் வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.