மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் மொத்த வெளிநாட்டு இராணுவத்தையும் வெளியேற்ற இருப்பதாக அறிவித்துள்ளது.
குறித்த நடவடிக்கைகளுக்கு காலக்கெடு எதையும் விதிக்கவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேசிய சட்டமன்றத்தில் கடந்த (20) வெள்ளிக்கிழமை நடந்த பொது கொள்கை அறிக்கையின் போது பிரதமர் உஸ்மான் சோன்கோ குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மிக விரைவிலேயே அனைத்து வெளிநாட்டு ராணுவ தளங்களையும் மூட குடியரசு தலைவர் முடிவு செய்துள்ளார் என அந்த அறிவிப்பில் பிரதமர் உஸ்மான் சோன்கோ குறிப்பிட்டுள்ளார்.
செனகல் நாட்டில் செயல்பட்டுவரும் பிரான்ஸ் இராணுவ முகாமை மூட வேண்டும் என கடந்த மாதம் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

செனகல் ஒரு சுதந்திர நாடு, அது ஒரு இறையாண்மை கொண்ட நாடு, மற்றும் இறையாண்மை ஒருபோதும் வெளிநாட்டு இராணுவ தளங்களின் இருப்புக்கு இடமளிக்காது என தனது அறிக்கையில் ஜனாதிபதி குறிப்பிட்டுருந்தார்.
உண்மையில் பிரான்சை குறிவைத்தே செனகல் நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர். ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியை முன்னர் பிரான்ஸ் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
பிரான்ஸ் ஏற்கனவே மாலி, புர்கினா பாசோ மற்றும் நைஜரை விட்டு வெளியேறியுள்ளது, மேலும் பல தசாப்தங்களாக இராணுவ ஒத்துழைப்புக்கு பிறகு சாட் நாட்டில் இருந்து வெளியேறும் செயல்முறை இந்த மாதம் தொடங்கியது. தற்போது செனகல் நாடும் பிரான்ஸ் நாட்டுக்கு எதிராக திரும்பியுள்ளது.