உலகின் மூத்த மொழி தமிழ் என்பதும், ஒவ்வொரு இந்தியரும் அதில் பெருமை கொள்வது நமக்குப் பெருமைக்குரிய விடயம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் வானொலி நிகழ்ச்சியில் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மொழி குறித்துப் பேசிய பிரதமர் மோடி,
உலகின் மூத்த மொழி தமிழ் என்பதும், ஒவ்வொரு இந்தியனும் அதில் பெருமை கொள்வதும் நமக்குப் பெருமைக்குரிய விடயம்.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் இதைப் படிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த மாத இறுதியில் ஃபிஜியில் இந்திய அரசின் ஆதரவுடன் தமிழ் கற்பித்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 80 ஆண்டுகளில் ஃபிஜியில் பயிற்சி பெற்ற தமிழ் ஆசிரியர்கள் மொழி கற்பிப்பது இதுவே முதல் முறையாகும்.
இன்று ஃபிஜி மாணவர்கள் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்றுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே, இந்த விஷயங்கள், இந்த சம்பவங்கள், வெறும் வெற்றிக் கதைகள் அல்ல. இவை நமது கலாச்சார பாரம்பரியத்தின் தொடர்கதையுமாகும். இந்த உதாரணங்கள் நம்மை பெருமிதத்தில் நிரப்புகின்றன.
கலை முதல் ஆயுர்வேதம் வரையிலும், மொழியிலிருந்து இசை வரையிலும், உலகில் முத்திரை பதித்துக்கொண்டிருக்கும் இந்தியாவில் நிறைய இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.