மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (30) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லைப் பிரச்சினையானது நீண்டகாலமாக காணப்படுவதாகவும் அவற்றை தீர்ப்பதற்கு அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இதனை கருத்திற்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் உடனடியாக விஷேட குழுவொன்றினை அமைக்க இணக்கம் தெரிவித்தார்.
மேலும் மிக நீண்டகால மக்கள் குடியிருப்பு காணிகளை அரச காணிகளாக அண்மையில் மன்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பிரதேச காணிகளை மீண்டும் அந்தந்த மக்களுக்கான தனியார் காணிகளாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கான நடவடிக்கைகளை குறித்த குழு ஊடாக மேற்கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்ததுடன் அந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்தலால் ரத்னசேகர, மற்றும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட திணைக்களத் தலைவர்கள், முப்படைகளின் உயர் அதிகாரிகள், உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.