இந்தியாவின் பஞ்சாப் மாநில ஹோசியார்பூரில், கடத்தல்காரர்களிடமிருந்து இலங்கையர்கள் இருவரை, இந்தியாவின் அமிர்தசரஸ் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கனிஸ்க மற்றும் சுமர்தன் என்ற பெயர்களை கொண்ட இரண்டு இலங்கையர்களே மீட்கப்பட்டதாக இந்திய இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட இருவரும், அல்பேனியாவில் தொழில் விசா வாங்கித் தருவதாகக் கூறி போலி பயண முகவர்களால் ஏமாற்றப்பட்ட ஆறு இலங்கையர்கள் குழுவில் உள்ளடங்கியிருந்ததாக அமிர்தசரஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள், 2025 டிசம்பர் 2 ஆம் திகதியன்று இந்தியா வந்து டெல்லியில் தங்கியிருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த அசித்த என்பவரை சந்தித்துள்ளனர்.
அவர், குறித்த இரண்டு இலங்கையர்களையும், இரண்டு இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்போது, இரண்டு இந்தியர்களும், வேலை விசாக்களை வழங்குவதற்காக பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து 3,000 அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து 2024 டிசம்பர் 27 ஆம் திகதியன்று இருவரையும் அமிர்தசரஸக்கு வருமாறு குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்களான அங்கித் மற்றும் இந்தர்ஜித் சிங் ஆகியோர் அழைப்பு விடுத்தனர்
இதன்படி, குறித்த இலங்கையர்கள் அமிர்தசரஸக்கு சென்றபோது, இந்தியர்கள் இருவரும், தமது காரில் பாதிக்கப்பட்டவர்களை பேருந்து நிலையத்திலிருந்து கடத்திச்சென்று, தமக்கு கூடுதலாக 8,000 யூரோக்களை கப்பமாக கோரியுள்ளனர்.
எனினும் குறித்த இலங்கையர்கள் இருவரும், ஏற்கனவே பாதிக்கப்பட்ட தங்கள் நண்பர்களிடம் உதவி கோரிய நிலையில், பொலிஸார், சில மணி நேரங்களுக்குள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.
இதன்போது இந்தியர்களான அங்கித் மற்றும் இந்தர்ஜித் சிங் கைது செய்யப்பட்டனர்.
அதே நேரத்தில் அவர்களின் மூன்றாவது நண்பர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், பாதிக்கப்பட்டவர்களை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அறிமுகப்படுத்திய இலங்கையைச் சேர்ந்த அசித்தவும் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.